Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Thangar Bachan’s Long Request To The People’s Representatives!

Thursday, June 8th, 2017
Thangar Bachan’s Long Request To The People’s Representatives!

Thangar Bachan Thangar Bachan was born on 1962 in the Pathirakott >> Read More... , the cinematographer, actor cum director has a lot of interest in the society. He had been raising his voice right from the Jallikattu protest and his social interest has been revealed in his films too. Thangar Bachan slammed the MLAs and MPs of Tamilnadu that they didn’t do anything good to the people. Thangar discussed in his statement about the water scarcity and farmer issues. Thangar Bachan feels worried about the farmers’ suicides. Here is the statement by Thangar Bachan:

 

 

அனைவருக்கும் வணக்கம்.

 

நீரின்றி அமையாது உலகு. இதன் பொருளைக் கேட்டால் தெரியாதாவர்கள் இருக்க மாட்டார்கள். தெரிந்திருந்தும்  நாம் எதைச் செய்தோம்? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள். பதவியில் இருந்தவர்களும், அவர்களுக்கு அதிகாரிகளாக இருந்தவர்களும் அதைப்பற்றி சிந்தனையே இல்லாமல் சொல்வதற்கெல்லாம் துணையாய் இருந்து தலையை ஆட்டினார்கள். இதையெல்லாம் பொறுப்பற்ற மக்களும் கண்டுகொள்ளவில்லை. தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யவும் இல்லை.

 

நாம் எல்லோருமே தண்ணீர் என்பது பூமியின் அடியிலிருந்து தான் கிடைக்கிறது என இன்றுவரை நினைத்துக்கொண்டு இருக்கிறோம். பணம் கொடுத்தால் தண்ணீர் கிடைக்கும் என எந்தப் பொறுப்பையும் உணராத மக்களாகிய நாமும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வருமானமே இல்லாமல் வங்கியில் சேர்த்து வைத்திருந்தப் பணத்தை எடுத்து எடுத்து  செலவு செய்து  கொண்டிருந்தால் இறுதியில் நம் கணக்கில் என்ன இருக்குமோ அந்த நிலைதான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள நீர் ஆதாரங்களின் நிலை.

 

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த காவிரி நதி கை நனைக்கக்கூட தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய் கிடக்கிறது. தாயின் மார்பிலிருந்து பால் வராமல் இரத்தம்தான் வருகிறது எனத் தெரிந்தும் இரத்தத்தைக் குடித்துக்கொண்டே இருக்கிறோம். நாம் 40 இலட்சம் ஏக்கரில் காவிரி நீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலங்கள் இன்று 8 இலட்சம் ஏக்கர்களாக மாறிவிட்டன. அந்த எட்டு இலட்சத்தில் ஒரே ஒரு ஏக்கரில் கூட இந்தப் பருவ விவசாயத்தை செய்ய முடியவில்லை.

 

விவசாயிகள் காவிரி நீருக்காக கதறிப் பார்த்தார்கள், நீர் வராமல் தற்கொலை செய்துகொண்டார்கள், நிர்வாணமாக தலை நகரத்தின் நடுவீதியில் ஓடிப்பார்த்தார்கள் ஒருவருக்கும் உறைக்கவில்லை. தாங்கள் ஆட்சியில் நீடித்தால் போதும் என ஆள்பவர்கள்  அவர்களை கைவிட்டு விட்டார்கள்.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது பற்றி எத்தனையோ  முறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் மத்திய அரசை ஆண்டவர்களும்,ஆள்பவர்களும்  காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை.மத்திய அரசை ஆள வருபவர்கள்  தாங்கள் எந்தக்காலத்திலும் தமிழகத்தை ஆளவே  முடியாது என்பது புரிந்து விட்டதால் இருக்கின்ற கர்நாடகத்தை தங்கள் பிடியில் வைத்துக் கொள்வதற்காக ஏதாவதொரு பொய்யையும், காரணத்தையும் சொல்லி ஐந்து ஆண்டுகால ஆட்சியை முடித்துக் கொள்கிறார்கள்.

 

இதன் விளைவாகவே 8 இலட்சம் ஏக்கரில் காவிரி நீரைக் கொண்டு பயிர்செய்த கர்நாடகம் தற்போது 40 இலட்சம் ஏக்கர்களாகவும், 40 இலட்சம் ஏக்கர் பயிர்செய்த நாம் இன்று  8 இலட்சம் ஏக்கர்களாகவும் சுருங்கி விட்டோம்.

 

தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கமும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் காவிரி நீர் சிக்கலைத் தீர்ப்பதற்காக கர்நாடக அரசியல் கட்சிகள்போல் ஒன்றிணைந்து செயல்படாமல் அவரவர்களின் ஆதாயத்துக்குத் தகுந்த மாதிரி செயல்பட்டு பதவி சுகத்தை அனுபவித்ததின் விளைவாகத்தான் காவிரிக்கு இந்த கதி ஏற்பட்டிருக்கிறது.

 

பொழிகின்ற நீரை சேமிக்க வக்கில்லாமலும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கத் தெரியாமலும், நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தெரியாமலும், குறைந்த அளவு நீரைக் கொண்டு இனியாவது விவசாயத்தைச் செய்யத் தவறிவிட்டவர்கள் தயவுகூர்ந்து இம்முறையாவது இந்த தமிழகத்தைக் காப்பாற்றுங்கள்.

 

நான் கேட்டுக்கொள்வதெல்லாம் தமிழக அரசியல் கட்சிகளிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகளால் தேர்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களும், விரைவில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் இம்முறை உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, தங்களின் சொந்தப் பகைகளை மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கிறோம் என அறிவிக்க வேண்டும்.

 

காவிரி நீர் சிக்கலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தின் அடிப்படையில் நீரைப் பெற்றுத் தருவதற்காக குடியரசுத் தலைவர் தேர்தலை இம்முறை புறக்கணித்து நடுவண் அரசுக்கு நியாயத்தை உணர்த்த வேண்டும். தமிழகத்தின் தற்போதைய அடிப்படைத் தேவை காலங்கலாமாக நாம் அனுபவித்துவந்த நமக்கு சொந்தமான காவிரி நீர் உரிமைதான் என்பதை தயவுகூர்ந்து  இப்போதாவது உணருங்கள். தமிழக மக்களின் குரலாக உங்களுக்கு சோறுபோடும் தமிழக விவசாயிகளின் குரலாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் உடனே உறுப்பினர்களுக்கு கட்டளை இடுங்கள்.

 

செய்ய வேண்டிய வேலைகளையே செய்யாதவர்கள், தொடர்ந்து பகை அரசியலையே செய்து தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்காமல் அவர்களைப் போராட்டத்திலேயே வைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கோரிக்கையையா  காது கொடுத்துக் கேட்பார்கள் என நண்பர்களும், என்னைச் சுற்றியுள்ளவர்களும் கூறினாலும் இதிலுள்ள நியாயத்தையும் தேவையையும், நம் அரசியல் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் இப்போது  உணர்வார்கள் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இக்கோரிக்கையை காதில் கேட்டும் கேட்காதது போல் நடந்து கொண்டால் நாம் அனைவருமே கடமையிலிருந்தும், பொறுப்பிலிருந்தும் தவறுகிறோம். சல்லிக்கட்டுக்காக, மாட்டுக்கறிக்காக கொதித்தெழுந்து போராட  வீதிக்கு வந்த இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகளை கதறவிட்டு வேடிக்கைப் பார்த்தது எந்த வகையிலும் நியாமில்லை என்பதை இப்போதாவது உணருங்கள். அவர்கள் வீதியில் நின்று நாள்தோறும் கதறிப் போராடுவது மூன்று வேளைகளும் நாம் அனைவரும் வகை வகையாக சாப்பிடுகிறோமே அதற்காகவும் சேர்த்துத்தான் என்பதை தயவுகூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

 

நியாயமான கோரிக்கைகளுக்காக யார் போராடினாலும் கோரிக்கை நிறைவேறி வெற்றிக் கிடைக்கிறது. ஆனால் விவசாயிகளின் நியாமானப் போராட்டம் என்றுமே வெற்றி பெற்றதில்லை.

விவசாயிகளை இந்த நிலையில் வைத்திருப்பது ஆளும் அரசாங்கங்கள் மட்டுமில்லை; அவர்களின் நியாயத்தைத் உணர்ந்து நம்முடைய உணவுத் தேவைக்காக அவர்களுடன் சேர்ந்து போராட முன்வராத இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனச் சொல்லிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் அனைவரும்தான்.

 

இதைப்புரிந்துகொள்ளாமல் இம்முறை தமிழகத்தைச் சார்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்தால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிரானவர்கள் நம் தமிழக  அரசியல்வாதிகளைத்தவிர வேறு யாருமில்லை.

 

அதேபோல் அவ்வாறு அவர்கள் செய்யத்தவறும்போது செய்யச் சொல்லி வற்புறுத்தி போராடாமல்  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் எந்த வகையிலும் இந்த அரசியல்வாதிகளுக்கு நாமும் குறைந்தவர்கள் இல்லை.

 

நிலத்தை காயவிட்டு, நதிகளைக் காயவிட்டு, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு  படித்தவர்கள் எனச்சொல்லிக் கொண்டு, தான் மட்டும் நல்லமுறையில் வாழ்ந்தால்போதும் என நினைக்கிறவர்களை  என்ன பெயரிட்டு  அழைக்கலாம்?

 

- தங்கர் பச்சான்

செம்புலம்

தமிழகம்.

08.06.2017

LATEST MOVIE REVIEWS


Today's Release

3 May, 2024

Today's Release

3 May, 2024

Today's Release

3 May, 2024

Today's Release

3 May, 2024

Upcoming

31 Aug, 2024

Upcoming

2024

Upcoming

2024